கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி என கலந்துகட்டி எந்தகால அரசியலுக்கும் பொருந்தும்விதமாக, சாட்டையடி கொடுத்த Political Satire படம் என்றால், இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில், சத்யராஜ் நடிப்பில் வெளியாகி அதிரடி ஹிட் அடித்த ‘அமைதிப்படை’ படத்தை, அடித்துக்கொள்ளவே முடியாது. அரசியலின் பின்னணி விளையாட்டுகளை காமெடி கலந்த காட்சிகளால் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த படத்தில் சத்யராஜ் நடித்த "அமாவாசை" கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒன்றாக மாறியது. இந்த படத்தில் மணிவண்ணனின் காதலியாக சிறிய வேடத்தில் நடித்திருந்த நடிகை தான் ஜெயா வாஹினி. தமிழில் "வாஹினி" என்ற பெயரில் நடித்த அவர், அந்த ஒரு காட்சியிலேயே ரசிகர்களின் இதயத்தில் அமர்ந்தவர். அதாவது, ராஜ ராஜ சோழன் எம்.ஏ. என பெயரைச்சூட்டிக்கொண்டு சுயேட்சையாக தேர்தலில் நின்று, ஓட்டு எண்ணிக்கையின் போது கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வித்தியாசம் கூடிக்கொண்டே போக, அப்போது அமாவாசை சத்யராஜ் செய்யும் அலப்பறைகள், அரசியல் உலகை கண்முன்னே நிறுத்தியதாக இப்போதும் பாராட்டப்படும். அப்போது, இதே காட்சியில் மணிவண்ணனை திடீரென பெயர் சொல்லி அழைத்துவிட்டு, சத்யராஜின் கால் மணிவண்ணன் மீது பட உடனே மணிவண்ணன் 'அம்மாவாச கால் படுது...' என்பார். அதற்கு 'பட்டா தள்ளி நில்லு' என்று சொல்லிவிட்டு தனது கையை எடுத்து மணிவண்ணனின் காதலியாக இருக்கும் பெண் மீது வைப்பார். அந்த காட்சியில் நடித்த நடிகை வாஹினியை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமுடியாது. ஆந்திராவைச் சேர்ந்த இவர், தமிழை விட தெலுங்கு திரையுலகில்தான் அதிகமாக செயல்பட்டார். ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்தாலும், தனது இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி பல திரைப்படங்களில் இடம்பிடித்தார். வாஹினிக்கு திரைப்படங்களை விட டெலிவிஷன் சீரியல்கள்தான் அவருக்கு அதிகமான புகழை கொண்டு வந்தது. குறிப்பாக தெலுங்கு சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து தனி அடையாளம் பெற்றார். பல ஆண்டுகள் தொடர்ந்து சீரியல்களில் நடித்த அவர், ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக மாறினார். 2019-ல் வெளியான 'ரகுபதி வெங்கையா நாயுடு' என்கிற தெலுங்கு திரைப்படத்தில் வி.கே. நரேஷுடன் இணைந்து அவர் நடித்த பாத்திரம் இப்போதும் பேசப்படுகிறது. சினிமா, சீரியல் என சுழன்றுகொண்டிருந்த வாஹினியை முடக்கிப்போட்டது அந்த பிரச்சனை. எங்கே போனார் என்று தேடியவர்களுக்கு பேரிடியாக வந்திறங்கியது அந்த தகவல். ஆம், மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு, நீண்ட காலமாக சிகிச்சை பெற்றுவந்தார் வாஹினி. ஒருகட்டத்தில் நோய் தீவிரமடைய ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போனார். எந்த அளவுக்கு என்றால் மொட்டை அடித்து முற்றிலும் உருக்குலைந்து காணப்படும் அளவுக்கு மாறினார். ஆனால், புற்றுநோய் என வந்துவிட்டால் உடலைவிட உயிரை காப்பாற்றுவதில்தான் கவனம் செலுத்தவேண்டும். இதற்கு, ஏஞ்சலினா ஜோலியை ஆரம்பித்து பலரையும் உதாரணம் காண்பித்து தேற்றினார்கள் மருத்துவர்கள். இந்தநிலையில், மருத்துவமனையில் 48 வயது நடிகை வாஹினி சிகிச்சை எடுத்து வந்த சமீபத்திய புகைப்படங்கள் திரையில் அவரை கண்டுகளித்த ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. அந்த அளவுக்கு அவரது உருவம் மாறிப்போயுள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்டால் இதுபோன்ற உடல் பிரச்சனைகளை எதிகொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், வாஹினியின் சிகிச்சைக்கு ரூ. 35 லட்சம் வரை பணம் தேவைப்பட்ட நிலையில், அதை இவரால் உடனே தயார் செய்ய முடியாமல் தவித்துப்போனதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், கூடுதல் சோகமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வாஹினியின் உயிர் பிரிந்திருக்கிறது. வாஹினியின் மரணச் செய்தியை அவரது தோழியும், நடிகையுமான கராத்தே கல்யாணி என்பவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த பிறகே, வாஹினிக்கு இப்படி ஒரு நிலை என்பதும், அவர் மரணமடைந்ததும் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. அந்தப் பதிவில், வாஹினியைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது முடியாமல் போனது என்று கல்யாணி வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். 1994 ல் வெளியான இத்திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், வாஹினியின் இறப்பு செய்தியும் வெளிவந்திருப்பது துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக, சமூக வலைதளத்தில் பலரும் சோகத்தைப் பகிர்ந்துவருகிறார்கள். ]]>
