ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன்  என நட்சத்திர பட்டாளங்கள் பலரும் நடித்த ஜனநாயகன் திரைப்படம், பொங்கல் விடுமுறைக்கு திரையில் வெளியாக இருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், ஜனநாயகன் திரைப்படம் திரையில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து, அண்மையில் 3 மணி நேரம் கொண்ட 'ஜனநாயகன்' 'திரைப்படம் இணையத்தில் கசிந்தது படக் குழுவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.   சிக்கிய முக்கிய குற்றவாளி...!  இந்த விவகாரம் தொடர்பாக படக்குழுவினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஏற்கனவே இத்திரைப்படத்தை பதிவேற்றம் செய்து பரப்பியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 3 பேரை தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் வெளியிட்ட அறிக்கையில் முக்கிய குற்றவாளி, வேறொரு திரைப்படத்தில் உதவி எடிட்டராக பணியாற்றி வந்தவர் என்பது தெரியவந்தது.  ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது எப்படி?  சென்னையில் ஜனநாயகன் திரைப்படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, படத்தின் ஒரு குறிப்பிட்ட சீனை மட்டும் எடிட் செய்ய அந்த நபர் வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த நபருக்கு எடிட்டிங் நடைபெறும் இடத்திற்குள் நுழைய அனுமதி கிடைத்துள்ளது.  ஒரு குறிப்பிட்ட பகுதியை எடிட் செய்ய சென்ற போது, அங்கு படத்திற்கான 'Editing Draft'ல் எடிட் செய்யப்படாமல் துண்டு துண்டுகளாக  படத்தின் காட்சிகள் இருந்ததை அந்த நபர் கவனித்துள்ளார். ஆர்வமிகுதியில் அந்த நபர், யாருக்கும் தெரியாமல் அங்கிருந்த வீடியோக்கள், அனைத்தையும் தனது கிளவுட் ஸ்டோரேஜில் காப்பி செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.  பின்னர், வீட்டிற்கு சென்ற அந்த நபர் துண்டு துண்டாக இருக்கும் படத்தின் ரீல்கள் அனைத்தையும் இணைத்து படமாக எடிட் செய்துள்ளார். இதனை பார்த்தது மட்டும் இல்லாமல், தனது நண்பர்கள் இருவருக்கு போன் செய்து, "நான் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து விட்டேன், எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என உளறிக் கொட்டியதோடு, "உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் பாருங்கள்" என அந்த இரண்டு நண்பர்களுக்கும் எடிட் செய்த முழு படத்தை அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்த நண்பர்களும் சும்மா இல்லாமல், படத்தை பார்த்துவிட்டு தங்களுக்கு தெரிந்த நட்பு வட்டாரத்திற்கு படத்தை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. பின்னணியில் அரசியலா? ஆர்வ மிகுதியால் தான் இது நடந்ததாகவும், அரசியல் காரணம் எதுவும் இல்லை என முக்கிய குற்றவாளி தெரிவித்ததாக போலீசார் கூறினர்.  ஐபி முகவரி, டவர் டம்ப் உள்ளிட்டவை வைத்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், விரிவான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் டிஜிட்டல் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார்  மூவரையும் கைது செய்ததாக சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற  காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை கைதான 9 நபர்களும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.  முக்கிய குற்றவாளியான Freelance உதவி எடிட்டர், "எடிட்டிங் யூனியனை சேர்ந்தவர் இல்லை" என எடிட்டர்ஸ் யூனியன் தலைவர் கோபி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மேலும் முக்கிய குற்றவாளியின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எடிட்டர்ஸ் யூனியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வீடியோவை காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்..!  ]]>

Bills & Payments · SPONSORED

Pay Any Bill Instantly

Electricity, water, gas and more — one app, zero hassle.

Visit AllBills.in